×

காரில் கஞ்சா கடத்தி வந்த கேரளா கும்பல் சிக்கியது: 55 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம்: அசாமில் இருந்து சேலம் வழியே 2 கார்களில் கஞ்சா கடத்திய கேரளா கும்பல் சிக்கியது. காரில் இருந்த 55 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஒடிசா, ஆந்திராவில் இருந்து சேலம் வழியே கேரளாவுக்கு ரயில்களில் கஞ்சா கடத்தப்பட்டு வருவதை தடுக்க ரயில்வே பாதுகாப்பு படை, சேலம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் இணைந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அசாமில் இருந்து சேலம் வழியே காரில் கஞ்சா கடத்தப்படுவதாக சேலம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் குருவியன்பள்ளி சுங்கசாவடி பகுதிக்கு சென்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கேரள பதிவெண் கொண்ட 2 கார்கள் வேகமாக வந்தன. அந்த கார்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்ட போது, காரில் இருந்து ஒருவர் தப்பியோடினார்.

பின்னர், கார்களில் சோதனையிட்டதில் கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது. 2 காருடன் 55 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், காரில் வந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் கேரளாவை சேர்ந்த ஷிஜூப் (30), ஜாபர் (36), சையத் ஹூசைன்(27), முஹம்மது நௌபல் (30) என்பதும், அவர்கள் கார்களில் அசாமில் இருந்து 55 கிலோ கஞ்சாவை கடத்தி எர்ணாகுளத்தில் சப்ளை செய்ய கொண்டு சென்றதும் தெரியவந்தது.

இதில், அசாம், ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வந்த முக்கிய குற்றவாளி ஷீஜூப் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. பறிமுதல் செய்த கஞ்சாவின் மதிப்பு ₹5.5 லட்சமாகும். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, 4 பேரையும் கைது செய்தனர். பின்னர், அவர்கள் 4 பேரையும் கிருஷ்ணகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். தப்பியோடி ஒருவரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

The post காரில் கஞ்சா கடத்தி வந்த கேரளா கும்பல் சிக்கியது: 55 கிலோ கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Salem ,Assam ,Odisha ,Andhra ,Kerala ,
× RELATED சேலம் மாவட்ட பாஜ தலைவர் மீது பெண்...